search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் முதல்வர் உத்தரவு"

    பீகார் மாநிலத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். #ShelterHomeCase #NitishOrderCBIProbe
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்நகரில் செயல்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளனர்.

    காப்பகத்தில் உள்ள 44 சிறுமிகளில் 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சிறுமிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என தெரிகிறது. இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.



    காப்பக சிறுமிகளை கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  அரசு பாதுகாப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் சட்டசபையில் கடுமையாக குற்றம்சாட்டியது. முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதன் காரணமாக அவையில் கடும் அமளி ஏற்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், காப்பக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை விவரங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு இந்த உத்தவை அவர் பிறப்பித்திருக்கிறார்.

    ‘காப்பகத்தில் நடந்த சம்பவம் அவமானகரமானது. இது தொடர்பாக காவல்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது. எனினும், குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பதால், வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது’ என நிதிஷ் குமார்  கூறியுள்ளார். #ShelterHomeCase #NitishOrderCBIProbe
    ×